பெருந்தொற்றுக்குப் பிறகான மீட்சி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை இயக்குவதில் ஜென் Z இன் பங்கு குறித்த அறிக்கையை ஆக்சுபோர்டு எகனாமிக்சுடன் இணைந்து இன்று வெளியிடுகிறோம். இது ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஆறு சந்தைகளில் இளைஞர்களின் எதிர்காலம் எப்படியுள்ளது என்பது பற்றிய சான்றுகள் அடிப்படையிலான பார்வையைக் கட்டமைப்பதோடு புதிய கள ஆய்வுகள், விரிவான தரவு மூலங்களின் பகுப்பாய்வு, தொழில் முனைவோர்கள் மற்றும் கொள்கை நிபுணர்களின் வல்லுநர் பார்வை ஆகியவற்றை உள்ளடக்கிய கலவையாக உள்ளது.
கடந்த 12 மாதங்களாக, இளைஞர்கள் தங்களின் கல்வி, தொழில் வாய்ப்புகள், மனநலம் மற்றும் நல்வாழ்விற்காக மாபெரும் சவால்களையும் தடைகளையும் தாண்டி வர வேண்டியிருந்தது. ஜென் Z இன் எதிர்காலம் நிலையின்மை நிறைந்ததாய் உள்ளது என்பது பரவலான கருத்தாக இருந்தாலும், அதில் நம்பிக்கைக்கான வாய்ப்பும் இருப்பதாக ஆக்சுபோர்டு எகனாமிக்சின் ஆய்வு காட்டுகிறது.
தொழினுட்பத்துடன் வளர்ந்த முதல் தலைமுறையான ஜென் Z, மீண்டெழுந்து டிஜிட்டல் திறன்களுக்கான வளர்ந்து வரும் தேவையை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தனித்தன்மையுடன் உள்ளனர்.
இவ்வறிக்கையின் முக்கியக் கருத்துக்களாவன:
2030க்குள் இந்த ஆறு சந்தைகளில் பணியாளர்கள் எண்ணிக்கை மும்மடங்காகி 87 மில்லியன் பணியாளர்களுடன் பணியிடங்களில் முக்கிய சக்தியாக ஜென் Z மாறுவார்கள்
அவர்கள் நுகர்வோர் செலவினங்களை உந்தும் பொறியாக இருப்பார்கள், 2030 இல் இந்தச் சந்தைகளில் $3.1 டிரில்லியன் செலவினங்களை ஆதரிப்பார்கள் என மதிப்பிடப்படுகிறது
தொழினுட்பமும் கோவிட்-19 உம் திறன்களுக்கான தேவையை உருமாற்றுவதாய் உள்ளன - பெரும்பாலான வேலைகளுக்கு மேம்பட்ட டிஜிட்டல் திறன்கள் தேவைப்படுகின்றன
சுறுசுறுப்பு, ஆர்வம், படைப்பாற்றல், உய்யச் சிந்தனை மற்றும் சிக்கல்களைத் தீர்த்தல் போன்ற திறன்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படும், இவை ஜென் Z இன் இயற்கை வலிமைகளாக உள்ளன
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழினுட்பங்களுள் ஒன்றான மிகைப்படுத்தப்பட்ட மெய்மையின் அதிகரித்த வாய்ப்புகளையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது, 2023க்குள் அதற்கான சந்தை நான்கு மடங்கு விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்-வாணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளைத் தாண்டி வளர்ந்து, மருத்துவம், கல்வி, கட்டிடக்கலை, பொழுதுபோக்கு, உற்பத்தித் துறை போன்றவற்றை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதை உருமாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறை வேலைகள் அதிகம் பிரபலமடைந்து வருகின்றன, அவற்றிற்கு தொழினுட்பமும் படைப்பாற்றலும் கலந்த கலவையான திறன்கள் தேவைப்படுகின்றன, இறுதியில் இது ஜென் Zக்கு சாதகமாய் அமையும்.
இந்த அறிக்கையில் குறுகிய காலத்தில் தேர்ச்சி இடைவெளிகளைக் குறைத்தல், நீண்ட காலத்தில் கல்வியின் பாரம்பரிய மாதிரிகளை மறுசிந்தனைக்குட்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அதிகரிக்கும் மாற்றத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு இளைஞர்களுக்கு உதவக்கூடிய ஆக்சுபோர்டு எகனாமிக்ஸ், தொழில்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பவர்கள் ஆகியோரின் பரிந்துரைகளும் அடங்கியுள்ளன.