2014 LA Hacks Keynote

The following keynote was delivered by Evan Spiegel, CEO of Snapchat, during LA Hacks at Pauley Pavilion on April 11, 2014.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பாலி பெவிலியனில் நடைபெற்ற LA ஹேக்ஸின் போது Snapchat இன் சி.இ.ஓ இவான் ஸ்பீகல் பின்வரும் சிறப்புரையை வழங்கினார்.
இன்று மாலை உங்கள் நேரத்தையும் கவனத்தையும் வழங்கியதற்கு நான் நன்றி செலுத்துகிறேன். இதை உருவாக்குவதற்காகப் பல இளைஞர்கள் இங்கு ஒன்றுகூடியிருப்பது முற்றிலும் நம்பமுடியாதது. நான் உங்களை உண்மையில் பாராட்டுகிறேன், என்னை உட்பட.
வெற்றிக்கான வழிகளைப் பற்றி மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள், நானும் எப்போதும் அதைக் குறித்து கொஞ்சம் ஆர்வமாகத் தான் இருக்கிறேன்.
ஆனால் சமீபத்தில் தான் நான் அதற்கான பதிலைக் கண்டுபிடித்தேன். ஒரு ஹாங்காங் கோவிலில் ஒரு விவேகமுள்ள வயதான மனிதரால் என் உள்ளங்கை ரேகை பார்க்கப்பட்டது எனது அதிர்ஷ்டம். நான் 30 வயதிற்குள் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனைப் பெறுவேன் என்று நான் தெரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் - வெற்றிக்கான மூன்று வழிகளையும் அவர் எனக்கு வழங்கினார்.
அவை பின்வருமாறு:
1. கடின உழைப்பு
2. திறன்
3. மனித உறவுகள்
அடுத்த 36 மணிநேரத்திற்கு ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நீங்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு இங்கு ஒன்றாக இருப்பதால் - கடின உழைப்பு அல்லது திறனைப் பற்றி விரிவாகக் கூற வேண்டிய அவசியம் இருப்பதாக நான் உணரவில்லை. அவை உங்களிடம் அதிகமாகவே உள்ளது.
எனவே, இன்றிரவு நான் இங்கு மனித உறவுகளின் மீது கவனம் செலுத்தப் போகிறேன், அவை வணிக அட்டைகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலமோ அல்லது ஒருவருக்கொருவர் லிங்கெட்இன்னில் சேர்ப்பதன் மூலமோ உருவாக்கப்பட்டவை அல்ல, ஆனால் ஆழ்ந்த, உணர்ச்சிபூர்வமான மற்றும் உற்சாகமான உரையாடலின் மூலம் காலப்போக்கில் உருவாக்கப்பட்டவை.
எனது உயர்நிலை பள்ளியின் முக்கியமான தருணத்தில் நான் கற்றுக்கொண்டதும், Snapchat -இல் நாம் செய்வதுமான சபை நடைமுறை குறித்து நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன், அவை தி ஓஜாய் அறக்கட்டளையிலிருந்து பெறப்பட்டது. இது உங்களில் சிலருக்குச் செயற்கையானதாகத் தோன்றலாம், ஆனால் இது நமக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, வாரத்திற்கு ஒரு முறை, சுமார் ஒரு மணி நேரத்திற்கு, 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி, அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். வெற்றிக்கு மூன்று வழிகள் இருப்பதைப் போலவே, சபைக்கு மூன்று விதிகள் உள்ளன. முதலாவது, எப்போதும் இதயத்திலிருந்து பேசவும், இரண்டாவது, கேட்க வேண்டியது ஒரு கடமை, மூன்றாவது, சபையில் நடக்கும் அனைத்தும் சபையிலேயே இருக்கும். இந்தக் குறிப்பிட்ட கலவையானது, நாம் எப்படி உணருகிறோம் என்பதை வெளிப்படுத்த மட்டுமல்லாமல், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் பாராட்டவும் கற்றுக்கொள்ள, நம்பமுடியாத அளவிற்குப் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்.
ஒரு நண்பர் என்னிடம் சொன்னார், நீங்கள் ஒருவரிடம் உங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், அவரை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், மேலும் நீங்கள் அவரின் கதைகளையும் அதிகம் கேட்க விரும்பலாம்.
எனவே இதயத்திலிருந்து பேசுவது அல்லது சிந்தனையுடன் கேட்பதின் முக்கியத்துவத்தைக் கழிக்காமல், சபையில் என்ன நடக்கிறதோ அது சபையிலேயே இருக்கும் என்ற கருத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். சபையின் போது வெளிப்படுத்தப்படும் உணர்வுகள் பகிரங்கமாகப் பகிரப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவது, நம்மை நாமே பாதிக்கப்படக்கூடிய ஒருவராக ஆக்கிக்கொள்ளும் ஒரு இடத்தை உருவாக்குகிறது. இது நம் ஆழ்ந்த, தனித்துவமான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது - வேறு சூழலில் இத்தகைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இன்னும் எளிமையாகச் சொல்வதானால்: சபையின் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, தனியுரிமை என்றால் பெரும்பாலும் இரகசியம் என்று வெளிப்படுத்தப்படுகிறது, ஆனால், Nissenbaum சுட்டிக்காட்டியுள்ளபடி, தனியுரிமை என்பது உண்மையில் சூழலைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகிறது. என்ன கூறப்பட்டது என்பதல்ல - ஆனால் அது எங்கு, யாரிடம் கூறப்பட்டது என்பதே முக்கியம். வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு நபர்களுடன் வெவ்வேறு விஷயங்களைப் பகிரும்போது உருவாகும் நெருக்கத்தை அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளவும் தனியுரிமை நம்மை அனுமதிக்கிறது.
Kundera எழுதியுள்ளதாவது, “நம் நண்பர்களின் முதுகிற்குப் பின் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசுகிறோம், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்; பொது வெளியில் இருப்பதை விடத் தனிப்பட்டவராக இருக்கும் போது நாம் வித்தியாசமாகச் செயல்படுகிறோம் என்பது அனைவரின் வெளிப்படையான அனுபவமாகும், இது தனிநபரின் வாழ்க்கையின் அடிப்படையாகும்; ஆர்வமூட்டும் வகையில், இந்த வெளிப்படையான உண்மை தன்னுணர்வற்றதாகவும், ஒப்புக்கொள்ளப்படாததாகவும், கண்ணாடி வீட்டின் பாடல் கனவுகளால் என்றென்றைக்கும் தெளிவற்றதாகவும் உள்ளது, இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் பாதுகாக்க வேண்டிய மதிப்பு என்பது அரிதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது."
அமெரிக்காவில், இணையத்திற்கு முன்பு, நம் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையேயான பிரிவு பொதுவாக நாம் இருக்கும் இடமான நம் வேலை மற்றும் நம் வீட்டோடு தொடர்புடையதாக இருக்கும். நாம் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு பேசும் சூழல் தெளிவாக இருந்தது. வேலையில், நாம் தொழில் பண்பட்டவராகவும், வீட்டில் கணவன்கள், மனைவிகள், மகன்கள் அல்லது மகள்களாகவும் இருந்தோம்.
பொது மற்றும் தனிப்பட்ட வெளிப்பாடுகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதில் மிகச் சிலரே பிரபலங்களை விடச் சிறந்தவர்களாக உள்ளனர், பிரபலங்களின் பொதுக் குணநலன்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை உருவாக்கலாம். ஒருவரின் தனியுரிமை அச்சுறுத்தப்படும்போது, ஒருவர் பகிர்ந்து கொள்ளும் சூழல் தோல்வியடையும்போது, பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைத் தெளிவாக வேறுபடுகின்றன.
சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில் நடந்து செல்லும்போது, ​​Marilyn Monroe-வின் “லாஸ்ட் (Lost) ஸ்கிராப்புக்கை” வெளிப்படுத்துவதாக உறுதியளித்த ஒரு நியூஸ்வீக் சிறப்பு வெளியீட்டை நான் பார்த்தேன். உண்மையில், ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் நண்பருக்காக அவர் உருவாக்கிய ஒரு ஸ்கிராப்புக்கை ஒரு பத்திரிகையாளர் கண்டுபிடித்தார்.
ஸ்கிராப்புக்கைப் பற்றி பத்திரிகையாளர் எழுதியுள்ளதாவது, “இது Marilyn இயல்பாகவும், கலைந்த கூந்தலுடனும் மற்றும் யாராவது அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் அல்லது அவரை எப்படிப் பார்ப்பார்கள் என்று கவலைப்படாமல் இருப்பது பற்றியது. படங்களில் என்ன இருக்கிறது என்று அவர் பார்க்கவில்லை. அவர் அந்தப் படங்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதையே பார்க்கிறார். அவர் கேளிக்கையை அனுபவிப்பதை விரும்புகிறார்."
படங்களுக்கு அருகில் எழுதப்பட்டுள்ள Marilyn -இன் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுடன், பக்கங்கள் வண்ணமயமாக உள்ளன. தயாரிப்பு உபகரணங்களால் சூழப்பட்டு ஒரு குளியல் அங்கியில் இருக்கும் தன்னுடைய புகைப்படத்திற்கு அருகில், அவர் எழுதியிருப்பதாவது, "ஒரு பெண் வேலை செய்யும் போது அவளுக்குத் தனியுரிமை என்பது இல்லை." Marilyn தனது ஸ்கிராப்புக்கை, தனது புகைப்படக்கார நண்பருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தனிப்பட்ட இடமாக உணர்ந்தார். இது அவரது பொதுக் குணநலனின் ஒரு அங்கமல்ல.
நம் நண்பர்களின் அல்லது நம் “பார்வையாளர்களின்” மகிழ்ச்சிக்காக, சூழல் இல்லாமல், பகிரக்கூடிய, நம் உணர்வுகளின் ஸ்கிராப்புக்குகளை உருவாக்க இணையம் நம்மை ஊக்குவிக்கிறது. நம் உணர்வுகள் தகவலாக வெளிப்படுத்தப்படுகின்றன - அவை நம் இருப்பை வகைப்படுத்தவும் சுயவிவரப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
இணையத்தில், தகவலின் செல்லுபடியைத் தீர்மானிக்கும் முயற்சியில் அதன் பிரபலத்துவத்தின் அடிப்படையில் நாம் அதை ஒழுங்கமைக்கிறோம். ஒரு வலைதளம் வேறு பல வலைதளங்களால் குறிப்பிடப்படுகிறது என்றால், அது மிகவும் மதிப்புமிக்கது அல்லது துல்லியமானது என்று பொதுவாகத் தீர்மானிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் உணர்வுகளும் இதே முறையில் அளவிடப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, பரப்பப்படுகின்றன. பிரபலமான உணர்ச்சி வெளிப்பாடு மிகவும் மதிப்புமிக்க வெளிப்பாடாக மாறுகிறது.
சமூக ஊடகத் தொழில்கள் நம் தனிப்பட்ட உறவுகளுக்குள் முதலாளித்துவத்தின் ஒரு ஆக்ரோஷமான விரிவாக்கத்தைக் குறிக்கின்றன. நம் நண்பர்களுக்காகச் செயல்படவும், அவர்கள் விரும்பும் விஷயங்களை உருவாக்கவும், “தனிப்பட்ட பிராண்டில்” வேலை செய்யவும் நாம் கேட்கப்படுகிறோம் - மேலும் நம்பகத்தன்மை என்பது நிலைத்தன்மையின் விளைவாகும் என்பதைப் பிராண்டுகள் நமக்குக் கற்பிக்கின்றன. நாம் நம் "உண்மையான தன்மையை" மதிக்க வேண்டும் மற்றும் நம் நண்பர்கள் அனைவரிடமும் அதையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் அல்லது மதிப்பிழப்பதற்கான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும்.
ஆனால் மனிதத்துவம் என்பது உண்மையாகவோ பொய்யாகவோ இருக்க முடியாது. நாம் முரண்பாடுகள் நிறைந்தவர்கள், மேலும், நாம் மாறுகிறோம். அதுதான் மனித வாழ்க்கையின் மகிழ்ச்சி. நாம் பிராண்டுகள் அல்ல; இது வெறுமனே நம் இயல்பில் இல்லை.
தொழில்நுட்பம், வெளிப்படையான கண்ணாடி இல்லத்தின் கட்டுக்கதையை நிலைநிறுத்தியுள்ளது மற்றும் விமர்சனமிக்க சிந்தனையை விடப் பிரபலமான கருத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. அதிகமான தகவல்கள் அதிக அறிவுக்குச் சமம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். மேலும், Rosen விவரித்துள்ளபடி, “நம் நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களிடம் முதலில் வெளிப்படுத்தப்பட்ட நெருக்கமான தனிப்பட்ட தகவல்கள் குறைவான புரிந்துகொள்ளும் தன்மையுடைய பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தப்படலாம் மற்றும் அவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்” என்ற ஒரு காலத்தில் அதிகமாக நாம் வாழ்கிறோம்.
ஒவ்வொரு முறையும் நாம் நம்மை வெளிப்படுத்தும்போது, ​​நாம் சொல்லும் விஷயங்கள் நிரந்தரமாகவும் பொதுவிலும் அறியப்படக்கூடும் என்ற புரிதலுடனேயே அவ்வாறு செய்கிறோம். சாத்தியமான மிகப்பெரிய பார்வையாளர் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வழிகளில் நம்மை வெளிப்படுத்த நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். பிரபலமான ஏற்புக்காக நாம் நமது தனித்துவத்தை இழக்கிறோம்.
பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களே வெற்றிகரமான தலைவர்கள் என்று நம்பும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்கியுள்ளோம் என்பது தான் எனது கவலை. எதையாவது ஆதரிப்பவர்களும், ஏதாவது ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டவர்களுமே சிறந்த தலைவர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் அந்தக் கண்ணோட்டம் தனியாக உருவாக்கப்படாமல், தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட வேண்டும் அல்லது மக்களின் ஆதரவை நாடி இயல்பாக்கப்படுவதன் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும்.
ஊக்கத்திற்காக, சோர்போனில் Roosevelt பேசிய இந்த வார்த்தைகளைத் தான் நான் பெரும்பாலும் சார்ந்திருக்கிறேன், அவர் அறிவித்துள்ளதாவது, “விமர்சகரோ, வலிமையான மனிதன் எவ்வாறு தடுமாறுகிறான் என்று அல்லது செயல்களைச் செய்கிறவன் அவற்றைச் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டும் மனிதரோ முக்கியமானவர்களில்லை. இதற்கான புகழ் உண்மையில் இவற்றை எதிர்கொள்பவனையே சேரும், அவன் முகம் தூசி மற்றும் வியர்வை மற்றும் இரத்தத்தால் கறைபட்டுள்ளது; அவன் வீரம் மிக்கவன், தவறு இழைப்பவன், மீண்டும் மீண்டும் இலக்கைத் தவற விடுபவன், ஆனால் உண்மையில் செயல்களைச் செய்யப் பாடுபடுபவன். ஏனென்றால் பிழை மற்றும் குறைபாடு இல்லாமல் எந்த முயற்சியும் இல்லை; அவன் மிகுந்த உற்சாகத்தையும், மிகுந்த ஈடுபாட்டையும் அறிந்தவன், அவன் ஒரு தகுதியான காரணத்திற்காக தன் வாழ்நாளைச் செலவிடுபவன்; எல்லாம் சிறப்பாக நடந்தால் உயர்ந்த சாதனையாளராவான், அவ்வாறு சிறப்பாக நடக்கவில்லையெனில், தோல்வியுற்றாலும் மிகப்பெரிய துணிவை வெளிப்படுத்தித் தோல்வியடைவான். அவ்வாறு நடப்பதால் வெற்றி தோல்வி இரண்டையுமே அறியாத கோழை மற்றும் தைரியமில்லாதவனாக அவன் அறியப்படமாட்டான்."
களத்தில் உள்ள ஆண்கள் தங்கள் வாழ்க்கைக்காகவோ, தங்கள் குடும்பத்திற்காகவோ, அல்லது தங்கள் கண்ணோட்டத்திற்காகவோ போராடாமல், பார்வையாளர்களுக்காகவும், கைதட்டலுக்காகவும் போராடும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்கியுள்ளோம். மேலும் நாம், பார்வையாளர்களாக, அரங்கில் அமர்ந்துகொண்டு, மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்கிக்கொண்டு, மது அருந்திக்கொண்டு, நன்கு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம் - நாம் நிரம்பியிருக்கிறோம் - ஆனால் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?
Kundera எழுதியுள்ளதாவது “மற்றொரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துவதென்பது வழக்கமாகவும் விதியாகவும் மாறும்போது, ​​தனிநபரின் உயிர்பிழைத்தல் அல்லது காணாமல் போதல் என்பது மிகப்பெரிய ஆபத்தில் இருக்கும் நேரத்தில் நாம் நுழைகிறோம்.”
இது தான் அந்த நேரம் என்று நான் நம்புகிறேன்.
அமெரிக்க ஜனாதிபதி Kennedy படுகொலை செய்யப்பட்ட நாளில் அவர் நிகழ்த்தவிருந்த உரையின் இறுதி பத்தியிலிருந்த சொற்களை நான் உங்களிடம் கூறுகிறேன். அந்த நாளில், Kennedy ஒரு போரின் போது பேசியிருப்பார். இன்றிரவு, தனிநபரின் அழிவைத் தடுப்பதற்கான போரை நாம் எதிர்கொள்ளும்போது இதைக் கேட்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்.
"நாம், இந்தத் நாட்டில், இந்த தலைமுறையில் - தேர்வு செய்வதை விடுத்து விதியின் படி செயல்படுகிறோம் - உலகச் சுதந்திரத்தின் சுவர்களில் காவலாளிகளாக இருக்கிறோம். ஆகையால், நம்முடைய சக்திக்கும் பொறுப்பிற்கும் நாம் தகுதியுடையவர்களாக இருப்போம் என்றும், ஞானத்தோடும் கட்டுப்பாட்டோடும் நம் பலத்தைப் பயன்படுத்துவோம் என்றும், நம் காலத்திலும், எல்லாக் காலத்திலும் “பூமியில் சமாதானம், மனிதர்களிடையே நல்லெண்ணம்” என்ற பண்டைய நோக்கத்தை அடைவோம் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம். அதுவே எப்போதும் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும், நம்முடைய குறிக்கோளின் நீதியே எப்போதும் நம் வலிமையின் அடித்தளமாக இருக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்பட்டபடி: “இறைவன் நகரத்தைப் பாதுகாத்தாலொழிய, காவலாளிகள் விழித்திருப்பது வீண்.”
ஹேக்கிங் என்றால், முக்கியமாக, மற்றவர்கள் வெளிப்படுத்த விரும்பாத விஷயங்களை வெளிப்படுத்துவது என்று கூறப்படும் களங்கத்தை நீக்க நாம் அனைவரும் இங்குக் கூடியிருக்கிறோம். இந்த வார இறுதியில் மற்றவர்களின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் கனவுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு இடத்தை உருவாக்குமாறு உங்கள் அனைவருக்கும் இந்த மிக முக்கியமான நேரத்தில் நான் சவால் விடுகிறேன். பகிர்வதிலும் உருவாக்குவதிலும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் காண நாம் இங்கு வந்துள்ளோம் - தனியுரிமை மூலம் பாதுகாக்கப்படுவதால், மனித உறவு மற்றும் தனிப்பட்ட வெளிப்பாட்டின் மகிழ்ச்சிகளை நமது எதிர்காலச் சந்ததியினர் கண்டறியும் வகையில் அவர்களுக்காக நாம் சிந்தனையுடன் உருவாக்க வேண்டும்.
Back To News