We Stand Together

Snap CEO Evan Spiegel sent the following memo to all Snap team members on Sunday, May 31. In it he condemns racism while advocating for creating more opportunity, and for living the American values of freedom, equality and justice for all.
என் வாழ்க்கையின் பிற்பகுதியில் எனக்குத் தென் ஆப்பிரிக்காவில் வேலை செய்யவும் படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது, அங்கு, என்னுடைய ஹீரோக்களில் ஒருவரான பிஷப் டூடூவைச் சந்திக்கும் சிறப்பு எனக்குக் கிடைத்தது. நிறவெறி மற்றும் இனவாதத்தின் பேரழிவுடன், முன்னேற்றம் மற்றும் சமரசத்திற்கான அயராத முயற்சிகளையும் நான் கண்டேன். ஸ்டான்ஃபோர்டில், என் மூத்த மாணவர் ஆண்டில் நான் உஜமாவில் வாழ்ந்தேன், அந்த வளாகம் கருப்பினத்துக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தங்குமிடமாகும் (அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கருப்பினத்தவர்கள்). ஸ்டான்ஃபோர்டில் இருந்த அதீத சலுகைகளுக்கு இடையிலும், நம் சமூகத்தில் உள்ள அன்றாட இனவாத அநீதிகள் பற்றி அறிவதற்கு நிறைய இருந்தது.
நான் இதைப் பகிர்ந்துகொள்வது, அமெரிக்காவில் கருப்பினத்தவருடைய வாழ்க்கை அனுபவங்களை நேரடியாகப் புரிந்துகொண்டுவிட்டதாகத் தெரிவிப்பதற்கு இல்லை, நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அமெரிக்காவிலும் உலகெங்கிலும் நீதிக்காக எழுப்பப்பட்டுவரும் பேரார்வம் மிக்க, தொடர்ந்த, நன்கு சிந்திக்கப்பட்ட மற்றும் ஆற்றல் நிறைந்த கோரிக்கையை நான் தனிப்பட்டமுறையில் கண்டுள்ளேன் அல்லது அதில் பங்கேற்றுள்ளேன். 30 ஆண்டுகளுக்குப்பிறகு, மில்லியன்கணக்கானோர் மாற்றத்துக்காக ஒரே குரலில் கோரிக்கை எழுப்பும்போது, முன்னேற்றமாகக் காண்பிப்பதற்கு மிகக் குறைவான விஷயங்களே உள்ளன. அமெரிக்காவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகக் காணாத அளவுகளை எட்டியுள்ளது, கருப்பு நிறமுடைய மக்கள் காரணமின்றிக் கொல்லப்படுகிற அச்சம் இல்லாமல் மளிகைக் கடைக்கோ, ஜாக்கிங்குக்கோ செல்ல முடியாது, எளிமையாகக் கூறினால், அமெரிக்கப் பரிசோதனைத் தோல்வியடைந்து கொண்டிருக்கிறது.
நான் இதைப் பகிர்கிறேன், ஏனெனில் எனக்கு புரிகிறது, MLK வின் வார்த்தைகளில், "கலவரம் என்பது கேள்விப்படாதவர்களின் மொழி", மேலும் பல நூற்றாண்டுகளாக மாற்றத்திற்காக அமைதியாக வாதிடுபவர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள், மேலும் சுதந்திரம், சமத்துவம் நோக்கிய பார்வையில் ஏதேனும் முன்னேற்றம் இருந்தால், அமெரிக்கா நீண்ட காலமாக வாக்குறுதியளித்த அனைவருக்கும் நீதி. கலவரத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஏன் கேட்கப்படவில்லை என்று உணர்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது.
ஸ்னாப்சாட்டை நாம் உருவாக்கியபிறகு நான் பேச அழைக்கப்பட்ட முதல் சொற்பொழிவு, 2013ல் ஸ்டான்ஃபோர்ட் தொழில்துறையில் பெண்கள் மாநாட்டில் பேசப்பட்டது. அதில் நான் இவ்வாறு அறிவித்தேன், “நான் ஓர் இளம், வெள்ளை, கல்வி கற்ற ஆண். நான் மிக, மிக அதிர்ஷ்டசாலி. மற்றும் வாழ்க்கை நியாயமானதாக இல்லை.” என்னுடைய சிறப்புரிமையைக் குறிப்பிட்டு, நம்முடைய சமூகத்தில் இருக்கும் நியாயமின்மையை ஏற்றுக்கொள்வது, குறிப்பாக, இதுபோன்ற அநீதிகளை நாள்தோறும் சந்திக்கிற, சமாளிக்கிற பெண் தொழில்துறைத் தலைவர்களுக்கு முன்னால் அதைத் தெரிவிப்பது ஆழமானது முக்கியமானது என்று நான் உணர்ந்தேன். என்னுடைய சசிறப்புரிமையை ஏற்றுக்கொள்வது எனக்கு ஒரு முக்கியமான முதல் படியாகும், ஏனெனில், பிறர் சொல்வதைக் கேட்பதற்கு அது எனக்கு உதவியது. ஒரு பணக்கார, வெள்ளை ஆணாக என்னுடைய அனுபவங்கள் நம்முடைய சக அமெரிக்கர்கள் அனுபவிக்கும் அநீதிகளிலிருந்து மிகவும் மாறுபட்டவை. என்னிலிருந்து மாறுபட்டுள்ளவர்களுடைய நிலையைப் புரிந்துகொள்வது, அந்தப் போராட்டத்தில் இன்னும் மேம்பட்ட ஒரு தோழராக மாறுவதற்கு எனக்கு உதவியுள்ளது.
நம் நாட்டின் உருவாக்கத்துக்குப் பின்னாலிருக்கும் அடிப்படை எண்ணம், உங்கள் பிறப்பின் சூழல் உங்கள் வாழ்க்கை செல்லும் வழியை முன்கூட்டியே தீர்மானிக்கவில்லை என்ற எண்ணம்தான். கடவுள் ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுத்தார் என்ற கருத்து அபத்தமானது என்று நம் நிறுவனர்கள் நினைத்தார்கள் - கடவுள் நம் அனைவரையும் தேர்ந்தெடுத்து நம் அனைவரையும் சமமாக நேசிக்கிறார். கடவுளின் அன்பை, கடவுள் நம் அனைவருக்குள்ளும் வசிக்கிறார் என்ற எண்ணத்தைப் பிரதிபலிக்கிற ஒரு சமூகத்தை உருவாக்க அவர்கள் விரும்பினார்கள். நம்மில் யாரோ ஒருவருக்குக் கூடுதலான அல்லது குறைவான அன்பைப் பெறும் தகுதி உள்ளதாகக் கடவுள் நம்புவதில்லை.
அதே நேரம், அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி ஆகிய மதிப்புகளை ஆதரித்த அதே ஸ்தாபன தந்தைகள் முதன்மையாக அடிமைகளின் உரிமையாளர்களாக இருந்தவர்கள். மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நாடு என்கிற அவர்களுடைய ஆற்றல்மிக்க பார்வை, தப்பெண்ணம், அநீதி மற்றும் இனவெறி ஆகியவற்றின் அடித்தளத்தில் கட்டப்பட்டது. இந்த அழுகிப்போன அடித்தளத்தையும், அனைவருக்கும் வாய்ப்பை உருவாக்காத அதன் தொடர்ச்சியான தோல்விகளையும் சரி செய்யாவிட்டால், நாம் அனைவரும் மனித முன்னேற்றத்திற்கான நம்முடைய உண்மையான திறனை உணர்வதிலிருந்து நம்மை நாமே தடுத்து நிறுத்துகிறோம், அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி என்கிற துணிவான தொலைநோக்கிலிருந்து நாம் தொடர்ந்து தொலைவிலேயே நிற்போம்.
அடிக்கடி நண்பர்கள், குழு உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களால் இந்த மாற்றத்தை உருவாக்க என்ன செய்யமுடியும் என கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதில் நான் ஒரு வல்லுனர் இல்லை, 29 என்கிற கனிந்த, மூத்த வயதில் உள்ள நான் உலகத்தின் செயல்பாடுகளைப்பற்றிக் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளது, இந்தப் புரிந்துகொள்ளலுடன், அமெரிக்காவில் நாம் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதற்கு என்ன தேவை என்பதுபற்றிய என்னுடைய சொந்தப் பார்வையை நான் கீழே பகிர்ந்துகொள்கிறேன். எல்லாப் பின்னணியிலிருந்து வருகிற எல்லா மக்களுக்கும் வாய்ப்புகளை இணையாக உருவாக்காமல் நாம் அமைப்பு சார்ந்த இனவாதத்தை நிறுத்த இயலாது.
முதல் மற்றும் மிக முக்கியமான படிநிலையாக நான் நம்புவது, ஒரு நாடாக நம்முடைய நிறுவல் மதிப்பீடுகளுக்கு நாம் நம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளோம் என்பதை மீண்டும் வலியுறுத்துவதுதான்: விடுதலை, சமத்துவம், நீதி, வாழ்க்கை, சுதந்தரம் மற்றும் மகிழ்ச்சியை நாடல். வருங்கால வெற்றிக்கான ஒரு பகிரப்பட்ட தொலைநோக்கை உருவாக்குவதற்காக நாம் ஒன்றாகப் பணிபுரியவேண்டும், நம்முடைய குழந்தைகளின் குழந்தைகளுக்கு அமெரிக்கா எப்படித் தோன்றவேண்டும் என்று நாம் விரும்புகிறோம் என்பதை வரையறுக்கவேண்டும். இது, அனைத்து அமெரிக்கர்களையும் பங்குபெறச்செய்கிற, “மக்களால், மக்களுக்காக” நடக்கிற ஒரு செயல்முறையாக இருக்கவேண்டும். நாம் எப்படிப்பட்ட நாடாக மாற விரும்புகிறோம் என்பதை நம்மால் வரையறுக்க இயன்றால், நாம் செயலில் இறங்கலாம், நம்முடைய பகிர்ந்துகொள்ளப்பட்ட தொலைநோக்கை ஓர் உண்மையாக்குவதற்காக எடுக்கவேண்டிய முக்கியத் தீர்மானங்களை எடுப்பதில் நம்முடைய மதிப்பீடுகளைச் செயல்படுத்தலாம்.
இத்துடன், நம்முடைய வெற்றியை நாம் வேறுவிதமாக வரையறுக்கத் தொடங்கவேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது பங்குச் சந்தை போன்ற அற்பமான குறுகிய கால அளவீடுகளை விட்டுவிட்டு, நம்முடைய மதிப்பீடுகள் நிறைவுபெறுதலை வெற்றியாகக் கருதவேண்டும். நீங்கள் பெறும் மதிப்பைக் கருத்தில் கொள்ளாமல் உங்களுடைய சுகாதார செலவுகள் அதிகரித்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது. ஒரு சூறாவளி நம்மைத் தாக்குகிறது, பல ஆயிரம் வீடுகளைச் சிதைக்கிறது, அவற்றையெல்லாம் நாம் மீண்டும் கட்டவேண்டும் என்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகுதியாகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது அடிப்படையில் ஓர் உடைந்த அளவீடு, உண்மையான மனித மகிழ்ச்சிக்கு எது பங்களிக்கிறது என்பதை அது பிரதிபலிப்பதில்லை. மகிழ்ச்சியை நாடுதல் என்பது, செல்வத்தை நாடுதலைத் தாண்டி விரிவடையவேண்டும்.
உண்மை, நல்லிணக்கம் மற்றும் இழப்பீடுகளின் அடிப்படையில் பன்முகத்தன்மை கொண்ட, பாகுபாடற்ற ஓர் ஆணையத்தை நாம் அமைக்கவேண்டும். அமெரிக்காவின் கருப்பினச் சமூகம் நாடுமுழுவதும் கேட்கப்படுவதை உறுதிசெய்கிற ஒரு செயல்முறையை நாம் தொடங்கவேண்டும், குற்றவியல் நீதி அமைப்பில் சார்புநிலை மற்றும் முன்தீர்மானம் உள்ளதா என்று விசாரிக்கவேண்டும், நீதிக் குடிமையியல் உரிமைகள் பிரிவுத் துறையை வலுப்படுத்தவேண்டும், ஆணையம் முன்வைத்துள்ள நல்லிணக்க மற்றும் இழப்பீட்டுப் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும். உலகெங்கும் நிகழ்ந்த அநியாயங்களைத் தொடர்ந்து, இதேபோன்ற ஒரு செயல்முறையை நிகழ்த்துகிற துணிவைக் கொண்டிருந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பல விஷயங்கள் உள்ளன, அமெரிக்க மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கிற, தேவையான மாற்றத்தைச் செய்து குணமடைவதற்கு நம் நாட்டுக்கு உதவுகிற ஒரு செயல்முறையை நாம் உருவாக்கவேண்டும்.
அமெரிக்காவில் “வாய்ப்பு எஞ்சினை” நாம் மீண்டும் தொடங்கவேண்டும், அதற்குக் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதியில் முதலீடு செய்யவேண்டும், ஒரு விடுதலை பெற்ற மற்றும் நியாயமான சமூகத்தின் அடிப்படை உட்பொருட்களாகிய இவற்றை அனைத்து மக்களுக்கும் கூடுதலாக, அவர்களுக்குக் கட்டுப்படியாகும்வகையில் கிடைக்கச்செய்யவேண்டும்.
1980களோடு ஒப்பிடும்போது அமெரிக்காவில் தொழில்முனைவு குறிப்பிடக்கூடிய அளவுக்குச் சரிந்திருப்பதற்கு ஒரு காரணமாக நான் நம்புவது, போதுமான அளவு சமூகப் பாதுகாப்பு வலை ஒன்று இல்லாததுதான். தொழில்முனைவு என்பது, மக்கள் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு ஆபத்துகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதைச் சார்ந்துள்ளது, எனக்கு இருந்ததைப் போன்ற ஒருவகையான பாதுகாப்பு வலை இல்லாவிட்டால் அதைச் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை. இன்றைய வருங்காலத் தொழில்முனைவோர்கள், மாணவர் கடன் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள், தேக்க நிலையில் உள்ள கூலி வளர்ச்சி, உயரும் செலவுகளைச் சந்திக்கிறார்கள், இதனால், ஒரு தொழிலைத் தொடங்கத் தேவையான முதலீட்டைச் சேமிப்பது கடினமாகிறது.
நம்முடைய குழந்தைகளுடைய குழந்தைகளுக்கு நன்மை தரும் வகையில் நம் நாட்டின் வருங்காலத்தில் முதலீடு செய்வது அதிக செலவைக் கொண்டதாகும். இன்னும் முற்போக்கான ஒரு வருமான வரி அமைப்பை, குறிப்பிடக்கூடிய அளவில் உயர்ந்த எஸ்டேட் வரியை நாம் கொண்டுவரவேண்டும், பெருநிறுவனங்கள் இன்னும் உயர்ந்த வரி விகிதத்தைச் செலுத்தவேண்டியிருக்கும். நாம் வருங்காலத்தில் முதலீடு செய்கிற நேரத்தில், கூட்டாட்சியின் பற்றாக்குறையையும் நாம் குறைக்கவேண்டும், இதன்மூலம், அதிவிரைவாக மாறிவரும் உலகத்தில் வருங்காலத்தில் வரக்கூடிய எந்தவொரு வெளிப்புற சவால்களையும் சந்திப்பதற்கு நாம் இன்னும் நன்றாகத் தயாராகலாம். சுருக்கமாகச் சொன்னால், என்னைப் போன்றவர்கள் இன்னும் கூடுதலான வரியைச் செலுத்துவார்கள், நம் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு மதிப்புள்ள செயல் அது என்று நான் நம்புகிறேன்.
இந்த மாற்றங்களில் பலவும், தொழில்நிறுவனங்களுக்குக் குறுகிய காலத்தில் “மோசமானவையாக” இருக்கலாம், ஆனால், அவை நம்முடைய மக்களுக்கான நீண்ட கால முதலீடுகளின் பிரதிநிதிகளாக இருப்பதால், நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக மிகச் சிறந்த நீண்ட காலப் பலன்களை அறுவடை செய்வோம் என்று நான் நம்புகிறேன்.
இந்த மாற்றம் ஏன் இன்னும் நிகழவில்லை? நம்முடைய அரசின் அனைத்துக் கிளைகளிலும் மிகப் பெரும்பான்மையாக உள்ள பூமர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கான ஒரு மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதில் மிகுதியான ஆர்வம் காட்டாததால்தான் இது நிகழ்ந்துள்ளது என்று நான் வாதிடுவேன். பல பத்தாண்டுகளாக, நம்முடைய அரசாங்கம் கடன் நிதி பெற்ற வரிக் குறைப்புகள் மற்றும் உரிமை வழங்கல் செலவுசெய்தல்களின் மூலமாக அதன் மிக முக்கியமான பகுதியை (பூமர்களை) வளமாக்கும் ஒரு வியூகத்தைப் பின்பற்றிவந்துள்ளது: தி பூமர்கள். உண்மையில், அமெரிக்காவில் உள்ள வீட்டுச் செல்வத்தில் கிட்டத்தட்ட 60%ஐ பூமர்கள் கொண்டுள்ளார்கள். பில்லியனர்கள் சுமார் 3%ஐதான் கொண்டுள்ளார்கள் என்கிற பின்னணியுடன் இதைப் பார்க்கவேண்டும். எடுத்துக்காட்டாக, சமூகப் பாதுகாப்பின்மூலம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பணக்காரர்களான ஒரு தலைமுறைக்கு எந்தவிதமான வருவாய்ப் பரிசோதனையும் இல்லாமல் பலன்களை வழங்கும் ஒரு திட்டத்துக்கு நாம் நிதியளிக்கிறோம்.
ஒரு மூத்த தலைமுறை, இளைய தலைமுறையில் தான் பிரதிபலிக்கப்படுவதைக் காணாவிட்டால், அவர்களுடைய வருங்காலத்தில் முதலீடு செய்வதற்குக் தயாராக இல்லை என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில், பூமர் தலைமுறை சுமார் 70% வெள்ளை மற்றும் ஜென் Z சுமார் 50% வெள்ளை. அமெரிக்காவின் மக்கள்தொகை மாற்றத்தைத் தவிர்க்க இயலாது. ஆகவே, இப்போது கேள்வி என்னவென்றால், நம்முடைய நிறுவல் மதிப்பீடுகளை இன்னும் நன்றாகப் பிரதிபலிக்கிற, நம்முடைய பழைய, ஆழமான காயங்களை ஆற்றுகிற, இனவாதத்தை அநீதியை நீக்கப் பாடுபடுகிற, அனைவருக்கும், எங்கு பிறந்தவர்களுக்கும் வாய்ப்பை உருவாக்குகிற ஒரு நாட்டை உருவாக்குவதற்காக நம்மால் ஒன்றாகச் செயல்பட இயலுமா, இயலாதா?
ஸ்னாப்சாட்டைப் பொறுத்தவரை, இனவாத வன்முறையைத் தூண்டும் மக்களுடன் தொடர்புடைய கணக்குகளை நம்மால் அமெரிக்காவில் முன்னிறுத்த இயலாது, அவர்கள் அதை நம் தளத்தில் செய்தாலும் சரி, வெளியில் செய்தாலும் சரி. நம்முடைய டிஸ்கவர் உள்ளடக்கத் தளம் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை வழங்கும் ஒரு தளமாகும், அங்கு எதை முன்னிறுத்துவது என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்குவதற்காகக் கடினமாக உழைப்பது பற்றி நாம் பலமுறை பேசியுள்ளோம், ஸ்னாப்சாட்டில் நாம் முன்னிறுத்தும் உள்ளடகத்தின் மூலம் அந்தப் பேச்சுக்கேற்ப நாம் நடப்போம். பிளவுபடுத்தும் மக்கள் ஸ்னாப்சாட்டில் ஒரு கணக்கை வைத்திருக்க நாம் தொடர்ந்து அனுமதிக்கலாம், அதே நேரம், அவர்கள் ஸ்னாப்சாட்டில் பதிவிடும் உள்ளடக்கம் நம்முடைய சமூக வழிகாட்டுதல்களுடன் பொருந்தவேண்டும். ஆனால், அந்தக் கணக்கையோ உள்ளடக்கத்தையோ நாம் எந்த விதத்திலும் முன்னிறுத்தக்கூடாது.
அன்பின் பக்கம் திரும்புவதற்கு இன்னும் நேரமிருக்கிறது, நம் சிறந்த நாட்டின் தலைவர்கள், நம்முடைய நிறுவல் மதிப்பீடுகள், நாம் உருவானதற்கான காரணமான விடுதலை, சமத்துவம் மற்றும் அனைவருக்கும் நீதி என்பவற்றை நோக்கிப் பணியாற்றுவார்கள் என்று நான் உண்மையாகவும் ஆர்வத்துடனும் நம்புகிறேன்.
அந்த நாள் வரும்வரையில், இனவாதம், வன்முறை மற்றும் அநீதியைப் பொறுத்தவரை இங்கு எந்தப் பழுப்புப் பகுதியும் இல்லை என்பதை நாம் நம்முடைய செயல்களால் தெளிவுபடுத்துவோம், இவற்றையோ, இவற்றுக்கு ஆதரவு அளிக்கிறவர்களையோ நாம் நம்முடைய தளத்தில் முன்னிறுத்தமாட்டோம்.
அதற்காக, மக்கள் உடன்படாத உள்ளடக்கத்தை அல்லது சிலருக்கு உணர்வற்ற கணக்குகளை நாங்கள் அகற்றுவோம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. நம் நாட்டின், உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிப் பல வாதங்கள் நிகழவேண்டும். ஆனால், மனித வாழ்க்கையின் மதிப்பு, விடுதலை, சமத்துவம் மற்றும் நீதிக்கான தொடர் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விவாதத்துக்கு நம் நாட்டில் இடமே இல்லை. அமைதி, அன்பு மற்றும் நீதிக்காக நிற்கிற அனைவருடனும் நாங்கள் சேர்ந்து நிற்கிறோம், தீமையை அல்ல, நன்மையை முன்னிறுத்துவதற்காகவே நாம் நம்முடைய தளத்தைப் பயன்படுத்துவோம்.
“சில மக்கள்” இனவாதிகளாக இருப்பதால் மட்டும், அல்லது, நம் சமூகத்தில் “சிறிது அநீதி” இருப்பதால் மட்டும் “நாம் அனைவரும் மோசமானவர்களாகிவிட மாட்டோம்” என்று பல மக்கள் உணர்வது எனக்குத் தெரியும். மனிதகுலம் என்பது ஆழமானவகையில் ஒருவரோடொருவர் பிணைக்கப்பட்டது என்பது என்னுடைய பார்வை, நம்மில் ஒருவர் துன்பப்படும்போது, நாம் எல்லாரும் துன்பப்படுகிறோம் என்று நான் எண்ணுகிறேன். நம்மில் ஒருவர் பசித்திருக்கும்போது, நாம் அனைவரும் பசித்திருக்கிறோம். நம்மில் ஒருவர் ஏழையாக இருக்கும்போது, நாம் அனைவரும் ஏழையாக இருக்கிறோம். நம்முடைய மௌனத்தின் வழியாக நம்மில் யாரேனும் அநீதிக்கு வழிவகுத்துவிட்டால், நாம் அனைவரும் தன்னுடைய மிக உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடும் ஒரு நாட்டை உருவாக்கத் தவறிவிட்டோம் என்று பொருள்.
உங்களில் சிலர், சமத்துவம் மற்றும் நீதிக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளுக்கு ஸ்னாப் பங்களிக்குமா என்பது பற்றிக் கேட்டுள்ளீர்கள். இதற்கான பதில், ஆம். ஆனால், நாம் சந்திக்கும் அநீதிகள் மிகக் கடுமையானவை, இதுபோன்ற நன்கொடைகளால் அதில் பெரிய மாற்றம் எதையும் உண்டாக்க இயலாது என்பது என்னுடைய அனுபவம். நலிந்தோருக்கான வாய்ப்பை உருவாக்குதலுக்காக நம் குடும்பம் பொருளுள்ளவகையில் பங்களித்துள்ளது, தொடர்ந்து பங்களிக்கிறது, நீதியைக் காப்போருக்காக நன்கொடை அளித்துள்ளது, தொடர்ந்து அளித்துவருகிறது, எனினும், இன்றைய சூழ்நிலை நம் சமூகத்தில் இன்னும் தீவிரமான ஒரு மாற்றத்துக்கு அழைப்பு விடுக்கிறது. தனிப்பட்ட நன்கொடைகள், தொண்டுகள் ஓட்டைகளை அடைக்கலாம், அல்லது, முன்னேற்றத்தை விரைவுபடுத்தலாம், ஆனால், அதைமட்டும் வைத்து அநீதியின் ஆழமான, அகலமான பிளவைக் கடந்துவிட இயலாது. நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஓர் ஒன்றுபட்ட நாடாக அந்தப் பிளவைக் கடக்கவேண்டும். சுதந்திரம், சமத்துவம் மற்றும் அனைவருக்கும் நீதி ஆகியவற்றுக்காகப் பாடுபடுவதில் நாம் ஒன்றாக இணையவேண்டும்.
நமக்கு முன்னால் பல மிகப்பெரிய சவால்கள் உள்ளன. ஜார்ஜ், அகமது மற்றும் ப்ரொயோனா ஆகியோர், எண்ணற்ற மக்களைப் பாதித்த அமெரிக்காவின் நீண்ட வன்முறை மற்றும் அநீதி மரபினால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இன்னும் பல பெயர்தெரியாதவர்கள். அந்த மரபை நாம் எதிர்கொள்ளவேண்டுமென்றால், ஆழமான மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நம் நாட்டில்மட்டும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தால் போதாது, நம் உள்ளங்களிலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அமைதியின் விளக்கை நாம் ஏந்திச்செல்லவேண்டும், அனைத்து மனித குலத்தினருடனும் அன்பின் அணைப்பைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
அமைதி உங்களுடன் இருக்கட்டும்,
இவான்
Back To News